இளைஞர் வளப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்
இன்றைய இளைஞர்களே நாளைய எதிர்காலம். எனவே சிறப்பான அர்த்தமுள்ள ஒரு எதிர்காலம் அமைய வேண்டுமானால் அதற்கான அத்திவாரம் சரியாக இடப்பட வேண்டும். அதாவது இன்றைய இளைஞர்கள் சரியாக வளப்படுத்தப்பட்டு வழிகாட்டப்படவேண்டும் இதனைக் கருத்திற்கொண்டே, குறிப்பாக மலையக பிரதேசத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் இளைஞர்களை வளப்படுத்தி வழிகாட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது சிந்தனை பவுண்டேஷன்.
மலையக மக்களின் வாழ்க்கை என்பது பலநெடுங்காலமாக அன்றாட போராட்டமாகவே இருந்து வந்திருக்கின்றது. இந்த துரதிஷ்ட நிலையின் காரணமாக நகர்ப்புறங்களில் வாழும் ஏனைய பல சமூகங்களோடு ஒப்பிடும் போது இவர்களது வாழ்க்கை பல்வேறுபட்ட அம்சங்களில் பின்தங்கியே காணப்படுகிறது. சரியான வழிகாட்டல் இன்றி, குறிப்பாக இளைய தலைமுறையினர் தமது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் பிழையான பாதையினை தேர்தெடுகின்றனர். எனவே நாங்கள் அவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இவ்வுலகில் அவர்களும் சிறப்புற வாழ்வதற்குத் தேவையான, அதேவேளை அவர்களுக்கு எட்டாக்கணியாக காணப்படும் சில அறிவூட்டல் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம் .
கொட்டகலை நகரில் இலவச கல்வி மையத்தை நிறுவி, கல்லூரி படிப்பை முடித்து வெளியேறும் இளைஞர்களுக்கு இலவசமாக அறிவூட்டல் மற்றும் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகின்றோம். ஒவ்வொரு வருடமும் உயர் தர அல்லது சாதாரண தர படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களை இணைத்து அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல தேவையான ஆங்கில கல்வி, சிங்கள கல்வி, கணினி பயிற்சி, சிந்தனை மேம்படுத்தல் மற்றும் ஒழுக்கவியல் கல்வி போன்ற விடயங்களை வழங்கி வருகின்றோம். தம் வாழ்க்கையில் அடுத்த கட்டமாக அவர்கள் மேற்படிப்பையோ அல்லது வேலையையோ இதில் எதை தேர்ந்தெடுத்தாலும் அந்த சூழலில் தங்களைத் திறம்பட வெளிக்காட்டத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளும் கலமாக சிந்தனை பவுண்டேஷன் அமைந்திருக்கின்றது.











